புன்னகை மறந்த பூங்கொடி
புன்னகை மறந்த பூங்கொடி
-------------------------------------------------
கையிலிருந்த காப்பியை பருகியவாறே அடுத்த மூலையிலிருந்து அவசரமாக கம்பியூட்டரைத் தட்டிக் கொண்டிருக்கும் ரேவதியைப் பார்த்தான் முரளி. இந்த ஆபிசில் அவன் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றது. ஏதோ புரியாத காரணம் அவனுக்கு ரேவதியின் மீது ஒரு தனி அக்கறை. அது அவளும் சக ஆசியப் பெண் என்பதினாலா?, அல்லது தனது தாய்மொழியான தமிழ் தான் அவளுக்கும் தாய்மொழி என்பதினாலா? என்று அவனுக்குப் புரியவில்லை.
இதைப்பற்றி போன வாரம் அவனது உற்ற நண்பன் டேவிட் இடம் கூறியபோது " டேய் , நீயும் மத்தவங்களைப் போல காலாகாலத்தில ஒரு கல்யாணத்தைப் பண்ணியிருந்தீன்னா இப்பிடியெல்லாம் பரிதாப உணர்ச்சிகள் அறியாத பொம்பிளங்க கிட்ட ஏற்படுமா? " என்று அந்தச் சந்தர்ப்பத்தை அவனது திருமணம் செய்யாத தன்மையைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்திக் கொண்டான்.
டேவிட் பாவம், முரளி மீது உள்ள அதீத பாசம், பின் என்ன தாய்நாட்டில் ஜந்து வயதில் இருந்து ஒன்றாகப் படித்துப் பின் ஒன்றாகப் புலம்பெயர்ந்து லண்டன் வந்து இன்று வரை உற்ற நண்பனாக இருக்கும் அவனுக்கு அக்கறை இருப்பதில் என்ன ஆச்சரியம்.
தாய்நாட்டிலிருக்கும் போது டேவிட் சரளாவையும், முரளி, மல்லிகாவையும் காதலித்தது ஒரு பொது ரகசியம். உற்ற தோழிகளான சரளாவுக்கும், மல்லிகாவுக்கும் ஒரேயொரு வித்தியாசம், காதலுக்காக எதையும் துறக்கத் தயாராக சரளாவும், தனது வசதிகள் தொடர்ந்தும் அதேயளவு இருக்கும் என்பது உறுதியானால் மட்டுமே, காதல் திருமணத்தில் முடியும் என்ற மனப்பான்மையில் மல்லிகாவும் இருந்தமையே.
முடிவு டேவிட்டின் காதல் வெற்றியடைந்து கல்யாணத்தில் முடிய, முரளியின் காதல் கனவாகி செல்வம் என்னும் காற்றில் கரைந்து போனது.
அதன் பின்பு இருபது வருடங்கள் ஓடி வாழ்க்கையின் மத்திய பகுதிக்கு வந்து வசதிகளின் வளைவுக்குள் நுழைந்து விட்டும் கூட அவனது காதல் கொடுத்த கசப்பான உணர்வினால் திருமணம் என்பது ஒரு பொய்யான சடங்கு என்று அதைத் தவிர்த்தே வந்தான் முரளி. பெண்களின் மீது நம்பிக்கை கொள்ள முடியாதவாறு மல்லிகா அவனது மனதை பாதித்து விட்டிருந்தாள்.
மனம் கடந்தகாலச் சுழலில் கொஞ்ச நேரம் சுழன்றாடி விட்டு மீண்டும் அந்த ஆபிஸ¤க்குள் வந்தது. மறுபடி முரளியின் பார்வை ரேவதியின் மீது விழுந்தது.
பார்வைக்கு சுமார் நாற்பது வயது மதிக்கத் தக்க பெண். முகத்தில் சாந்தத்தோடு கூடிய பாந்தமான அழகு, தலைமுடி ஓரங்களில் வெள்ளிக் கீற்றுக்களென ஓரிரு நரைமுடிகளைக் கொண்டிருந்தது.ஆபிஸ் நேரம் தவிர்த்து மாலைநேரங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து வெளியே போவார்கள் என்றும் அறிந்திருந்தான்.
அப்போது லண்டனில் மிகவும் பிரபலமான ஒரு மியூசிக்கல் ஷோ நடந்து கொண்டிருந்தது. அது ஒரு இந்திய கலாச்சார ஷோ, வெள்ளையர்கள் மத்தியில் கூட மிகவும் பிரபலமடைந்திருந்தது. அப்போது ஒருநாள் அனுஷா, முரளியிடம் " எனது கணவரும், பிள்ளைகளும் இரண்டுவாரம் இந்தியா போயிருக்கிறார்கள், எனக்கு மிகவும் போரிங் ஆக இருக்கின்றது ரேவதியும் வருவதாக கூறியிருக்கின்றாள், வருகிறாயா நாம் அந்த இண்டியன் ஷோ போய்ப் பார்க்கலாம்" என்று அழைத்தாள்.
சிறிது தயங்கிய முரளியின் மனதில் அவனது நண்பன் டேவிட் கூறும் வார்த்தைகள் பட்டுத் தெறித்தன " டேய் ஒருமுறை நெருப்பில் கை வைத்து விட்டாய், அதற்காக குளிர் காய்வதற்காகக் கூட நெருப்பின் பக்கம் நிற்க மாட்டேன் என்றா அடம் பிடிப்பது, கொஞ்சம் உனது கொள்கையை மாற்றிக் கொள்ளக் கூடாதா ? " . அது மட்டுமல்ல அவனது மனதில் ஏதோ ஆவல், ரேவதியைப் பற்றி அறிய வேண்டும் என்றும் தூண்டியது. " ஓகே, வருகிறேன்" கொஞ்சம் துள்ளலுடன் ஒலித்தது அவன் குரல்.
அந்தத் தியேட்டரைச் சென்றடைந்து வாயிலை நெருங்கி அனுஷா சந்திக்கச் சொன்ன இடத்திற்கு சென்றான். அங்கே ரேவதி நின்று கொண்டிருந்தாள். அழகிய கருநீல நிறம் கலந்த சுடிதாரின் அழகை அவள் அணிந்திருந்த கறுப்புக் கோட் மறைத்தது.
அவனைக் கண்டதும் ஒரு நாணம் மருவிய புன்னகை அந்த பூங்கொடியின் முகத்தில் மலர்ந்தது. கழுத்தை மறைத்திருந்த கோட்டின் வழியாக தாலி தெரிகின்றதா என்று அவனது கண்கள் துருவின. ஹ¥ம் அவன் கண்களில் எதுவுமே தட்டுப்படவில்லை. தாலி கழுத்தில் இல்லை என்பதை மட்டுமே வைத்து எப்படி அவள் திருமணமாகாதவள் என்று சொல்ல முடியும்? இன்றைய பெண்கள் அதுவும் லண்டனில்.....ஒருவேளை கிறீஸ்துவப் பெண்மணியாக இருந்து தாலி அணியாதவளாக இருந்து விட்டால்... அவனது மனம் பல கேள்விகளைத் தொடுத்தது. சே! என்ன இது ஒரு இளைஞனைப் போல இது என்ன... பைத்தியக்காரனாகி விட்டேனே .. சுதாகரிக்கும் போது,
" வாட், பேசவே மாட்டெங்கிறீங்க " .....குரல் ஒலித்ததும் திரும்பவும் அவளைப் பார்த்தான். சிலை பேசுமா? ஓ பேசி விட்டதே ...
" ஓ சாரி, நான் அனுஷாவைக் காணல்லையேன்னு பாத்தேன் " மழுப்பினான்.
" ஜ ஆம் சாரி, அனுஷா போன் பண்ணினாள் அவளோட மாமியாருக்கு உடம்புக்கு ஆகலியாம், வரமுடியலேன்னுட்டு ..." தயக்கத்தோடு அவனைப் பார்த்தாள்.
" அப்போ சால் வீ கோ ஹோம் ? " கேட்டான் முரளி ஏமாற்றத்துடன்
" வை, ஏன் இந்த ஜேர்னியை வேஸ்ட் பண்ணனும், இவ் யூ டோண்ட் மைண்ட், நாம பாக்கலாம் " எதிர்பார்ப்புக்களோடு ரேவதி
" ஜ டோண் மைண்ட் " உற்சாகமாக முரளி.
அந்த மாலை இவ்வளவு இனிமையாக இருக்கும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. மாறி, மாறி ஒவ்வொருவரும் மற்றவரைச் சிரிப்பூட்டும் வகையில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஷோ முடிந்து வீடு திரும்பும் போது,
" நான் வேணுமென்னா உங்க கூட உங்க ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா? " அக்கறையுடன் முரளி கேட்டான்.
என்ன மிஸ்டர் முரளி இவ்வளவு நாளும் நீங்களா என் கூட துணையா வந்தீங்க ? " சிரித்தவாறே கேட்டாள் ரேவதி.
இப்ப உத்தரவு கொடுத்தீங்கன்னா வாழ்க்கை பூராவும் துணையா வரேனே .. என்று சொல்ல முரளியின் மனம் துடித்தாலும், சிரித்து மழுப்பி விட்டான்.
"எனி வே, இந்த ஈவினிங் ரொம்ப இண்ட்ரஸ்டிங் ஆக இருந்துது, வீ வில் மீட் அகெய்ன்" என்று விடைபெற்றாள் ரேவதி.
எத்தனையோ கேள்விகள் தொண்டவரை வந்து சிக்குப்பட்டு விட்டன. முரளிக்கு இருந்தாலும் ஏனோ அவன் மனம் குதூகலத்தால் துள்ளியது. அன்று இரவு நாண்கு விழிகளும், இரண்டு நெஞ்சங்களும் உறக்கம் வராமல் உழன்று கொண்டிருந்தன.
அடுத்தநாள் காலை ஆபிஸ் லிப்டில் சந்தித்த அனுஷா நேற்று ஈவினிங் இரண்டு பேரும் நன்றாக என்ஜோய் பண்ணினீங்க போலிருக்கு என்று சொன்னபோது, ரேவதி அதைப்பற்றி ஏற்கனவே அவளுக்கு சொல்லிவிட்டாள் என்று முரளி புரிந்து கொண்டான்.அன்றிலிருந்து டீ பிரேக், லஞ்ச் பிரேக் மூவரும் சேர்ந்தே கண்டீனில் வலம் வந்தார்கள். ரேவதியும், முரளியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் போல ஒரே சிரிப்புடன் சேர்ந்த சம்பாஷணையில் லயித்தார்கள்.
டேவிட் கூட " டேய், முரளி என்னடா ரேவதியைக் காதலிக்கிறாயா? ஆளே மாறிப்போய் விட்டாயே..." என்று ஆச்சரியப்பட்டு விட்டான்.
காதலா ? எனக்கா ? அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரேவதியைக் காணும் போதும், பேசும் போதும் மனதுக்குள் உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுப்பது உண்மைதான், ஆனால் அது ஏனோ காமம் கலந்த உணர்ச்சியாக அவனுக்குத் தென்படவில்லை. ஒரு உற்ற நண்பனுடன் மனம் திறந்து மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஒரு உணர்வுடன் தான் பழகுவது போலத் தெரிந்தது.
ஒருவேளை, ரேவதி இதைக் காதல் என்று தவறாக எண்ணி விடுவாளோ ? .. அவன் மனம் அங்கலாய்த்தது.
அன்று ரேவதியைச் சந்திக்கும்போது, " ரேவதி நியூஇயருக்கு என்ன புரோகிராம்? " என்று கேட்டான்
" என்ன நியூஇயர் இட் இஸ் ஏப்பிரல் ..." கொஞ்சம் திகைப்புடன் கேட்டாள் ரேவதி.
" யேஸ், ஏப்பிரல் 5ம் திகதி இன்று, வருகின்ற 14ம் திகதி தமிழ் நியூஇயர் மறந்தே விட்டாயா? என்று கேட்ட முரளியை விசித்திரமாகப் பார்த்தாள் ரேவதி. ஓ, நீயும் கூட இந்த கலாச்சாரக் கும்பலுடன் சேர்ந்தவனா" கொஞ்சம் ஏளனத்துடன் கேட்டவள்
அவசரமாக " நான் கொஞ்சம் வெளியே போகணும் " என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
ஒன்றும் புரியாதவனாக கொஞ்சம் திகைத்த முரளி, தான் என்ன அப்படித் தப்பாகக் கேட்டு விட்டேன் என்று புரியாமல் குழம்பினான்.
அடுத்து வந்த சில நாட்கள் ரேவதி அவனுடன் கொஞ்சம் ஒதுங்கியே பழகினாள். அது ஏனென்று புரியாமல் தவித்த முரளி அனுஷாவிடம் தனது குழப்பத்தைப் பகிர்ந்து கொண்டான். அப்போது அனுஷா,
" முரளி ரேவதியைப் பற்றி உனக்குத் தெரியாத விஷயத்தை அவள் அனுமதி இல்லாமலே உனக்குச் சொல்லப் போகின்றேன். பாவம் ரேவதி சிங்கப்பூரில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவள். பெற்றோருக்கு ஒரே மகளான அவளை ஆசையாக வளர்த்து ஒரு பணக்கார மாப்பிள்ளைக்கு மனைவியாக்கினார்கள். தமிழ்க் கலாச்சாரங்களில் ஊறிப்போயிருந்த ரேவதியும், கணவனுடன் மிகவும் அன்பாக இருந்தாள். அவர்களுக்கு ஒரு மகன். மகனுக்கு ஆறு வயதாயிருக்கும்போது, சிங்கப்பூரில் ஏற்கனவே பழக்கமாயிருந்த ஒரு டான்ச் டீச்சருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த அவளது கணவன், ஒரு தீபாவளி தினத்தன்று அவளையும், மகனையும் விட்டுப் பிரிந்து போய் விட்டான். அதன் பின்பு மகனே கதியென்றிருந்த அவள் தனது வாழ்க்கை முழுவதையும் தனது மகன் கோபிக்கே அர்ப்பணித்தாள்.
கோபியும் வளர்ந்து பெரியவனானதும், தனது தந்தையைப் பற்றிக் கேட்கத் தொடங்கினான். மிகவும் கலாச்சார பக்தி கொண்ட ரேவதியும் தனது மகனுக்குத் தந்தையின் முழு விபரங்களையும் கூறி, அவனைச் சந்திப்பதற்காக அவனை சிங்கப்பூர் அனுப்பி வைத்தாள். அன்று ஒரு தமிழ்ப்புத்தாண்டு தினம். அன்றுதான் அவனது மகன் லண்டன் திரும்பி வருவதாக இருந்தது. அவன் வரவில்லை, புத்தாண்டு அன்று அவளுக்கு ஒரு புதிய செய்தி கிடைத்தது, அவளது மகன் கோபி அப்பாவுடன் தான் இனி வாழ்ப்போகின்றேன் என்று அனுப்பிய செய்தி."
"பதினாறு வருடங்களாய்க் கண்ணின் மணி போலக் காத்த மகன், பதினாறு நாட்களில் பாசத்தை மறந்ததும், அனைத்தையும் துறந்து விட்டாள் ரேவதி. ஆனாலும் பைத்தியமாக மாறாமல் மன உறுதியுடன் இன்றும் வாழ்ந்து வருகின்றாள். இப்போ கலாச்சாரம் என்பதுவே அவளுக்குக் கசக்கின்ற விஷயமாகி விட்டது."
"முரளி, அவள் கொஞ்சம் செண்டிமெண்ட் ஆக இருந்தால் கொஞ்சம் பொறுத்துப் போ. உனது நட்பினால் தான் அவளின் முகத்தில் மீண்டும் மலர்ச்சியைக் காண்கின்றேன். " என்று அனுஷா முடிக்கவும், முரளியின் நெஞ்சம் கனத்து, கண்களில் லேசாகக் கண்ணீர் பனித்தது.
அன்று ஏப்பிரல் 14ம் நாள், கையில் ஒரு பொட்டலத்துடன் ரேவதி வீட்டுக் கதவைத் தட்டினான் முரளி. கதவு திறந்தது, கண்களில் சோகத்துடன் காட்சியானது அந்தப் பூங்கொடி."உள்ளே வரலாமா?" தயங்கினான் முரளி.
" வாங்க " என்றவாறு உள்ளே சென்றாள் ரேவதி.
உள்ளே சென்றவன், ரேவதியின் கைகளில் அந்தப் பொட்டலத்தைத் திணித்தான். அவளை கம்பீரத்துடன் பார்த்துக் கொண்டே,
" ரேவதி, உங்கள் வாழ்க்கையின் சோகத்தை நானறிவேன் உண்மை அன்பு உங்கள் இதயத்தைப் புண்ணாக்கியதை நானறிவேன். நான்கூட ஒருவகையில் உண்மை அன்பினால் பாதிக்கப்பட்டவன் தான். நீங்க உங்களுக்கு சோகத்தைக் கொடுத்ததினால் புதுவருடத்தையே எதிர்க்கிறீங்க. ஆனா இந்தப் புதுவருடம் உங்களுக்கு ஒரு புதுச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறது..." அவன் முடிக்கவில்லை
"என்ன சொல்றீங்க முரளி..." தயக்கமும், ஆவலும் நிறைந்த கேள்வி
" இந்தப் புதுவருஷத்துல, தமிழர் திருநாளில், உங்க கையில ஒரு பொட்டலத்தைக் கொடுத்திருக்கேன். இது நாம ரெண்டு பேரும் சேர்றதுக்கு அச்சாரம், கணவன் மனைவியா அல்ல, நண்பர்களாக. ஆமாம் ஒரு ஆணும் பெண்னும் ஜோடி சேர்வது இல்லற வாழ்க்கைக்காக மட்டுமா? இல்லையே நல்ல நண்பர்களாகக் கூட இருக்கலாமே. உண்மை அன்பை விலையாகக் கொடுத்து எமது இதயங்கள் புண்ணாச்சு. அதுக்குக் காரணமானவங்களும் தமிழங்க தானே.. அவங்களுக்கு புதுவருஷம் இருந்தா ஏன் நமக்கு இருக்ககூடாது? போங்க நான் சொன்னதை ஏத்துக்கிட்டீங்கன்னா நான் கொடுத்த பொட்டலத்துல இருக்கிற பூவைத் தலையில வச்சுட்டு வாங்க,
நண்பர்களாக சேர்ந்து இந்தத் தமிழர் திருநாளில கோயிலுக்கு போயிட்டு வருவோம், இல்லேன்னா அந்தப்பூவைக் கசக்கிப் போட்டுடுங்க நான் போயிடுறேன் " ஆக்ரோஷமாக முடித்தான் முரளி.
கையிலிருந்த பொட்டலத்தை உற்றுப்பார்த்தவளின் மற்றக் கை பொட்டலத்தை நோக்கிப் போனது, கசக்கப்போகின்றதோ என்று பார்த்த முரளியின் கண்களில் பொட்டலத்தை பிரிக்கும் காட்சி மகிழ்வூட்டியது.
ஜந்து நிமிடங்களின் பின்னர், அவனுக்கே பிடித்த அந்தக் கருநீல நிறச்சேலையணிந்து வெளியே வந்த ரேவதியின் தலையில் அந்த மல்லிகை மலர்கள் சிரித்தன.
அவனை நோக்கி நீட்டிய அவளது கரங்களைப் பற்றியபடி வெளியே வந்தான் முரளி, அந்தப் பூங்கொடியின் வதனத்தில் மறந்து போன புன்னகை மீண்டும் மலர்ந்தது.
------------------------
(யாவும் கற்பனையே)
ஆக்கம் - சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home