சிறுகதை உலகில்

Tuesday, August 15, 2023

அவளும்.ஒரு பெண் தான்

அன்று வியாழக்கிழமையாதலால் கோவிலில் கூட்டம் அதிகம் இருக்கவில்லை.லண்டனுக்கு வந்த இந்த மூன்று வருடங்களில்சேகர் கண்டு கொண்ட உண்மை அவன் வசிக்கும் நகரில் உள்ள அந்தபிள்ளையார் கோவிலில் வியாழக்கிழமைகளில் அதிகம் கூட்டம் இருப்பதில்லை என்பதுவே.

வழக்கமாக தான் நிற்கும் அந்த வலதுபுற மூலையிலே நின்று அமைதியாக பிரார்த்திக்கத் தொடங்கிய சேகர் மீண்டும் கண்களைத் திறந்த போது அதே ஓரத்தில் ஜீன்ஸ்,டீசேர்ர்ட்  அணிந்த அதே பெண் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.

அப்போதுதான் அவளை நன்றாக நோட்டம் விட்டான். வயது ஒரு நாற்பத்தைந்திருக்கலாம், பக்கவாட்டில் ஏறக்குறைய அவனுடைய அக்காவைப் பார்த்தது போல் இருந்தது. அக்காவிற்கும் இப்போது வயது நாற்பத்தைந்துதானே ஆகிறது. அளவான உடற்கட்டு. களையான முகம். ஆழ்ந்த சிந்தனையால் சுருக்கம் விழுந்த நெற்றி என அவளை மிகவும் சொற்ப நேரத்தினுள் ஒரு முழுச் சுற்றளவே எடுத்து விட்டான்.

யாரோதன் காலைத் தற்செயலாகத் தட்டிவிட்டு "சாரி"என்றதும்"இட்  இஸ் ஓகே,பரவாயில்லை"என்றவாறேதிரும்பியவன் கண்களில் அந்தமுன்புறம் வழுக்கை விழுந்த கண்ணாடி அணிந்த 50 வயது மதிக்கத் தக்க நபர் தட்டுப்பட்டார்.

 "ஓ இவரா?"என மனதுக்குள் கூறிக் கொண்டான்.ஆமாம் அவரையும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இக்கோவிலில் அவன் சந்திப்பது வழமையாகி விட்டது. மிகவும் அமைதியான,சாந்தமான ஒரு புன்னகை அம்மனிதரின் முகத்தினில் இழையோடியது.

 "தனசேகர்,பூசம்" என்று சொல்லிக் கொண்டே குருக்களின் கையில் அர்ச்சனைச் சீடைக் கொடுத்த சேகரின் பின்னே "என்ன மச்சான் நல்ல மனுசி கிடைக்க வேண்டும் என்று அர்ச்சனையோ?" என்றுநகைச்சுவை ததும்ப கேட்டபடி நண்பன் ரூபன் நின்று கொண்டிருந்தான்.

"போடா! உனக்கு எப்பவுமே ஒரு நக்கல் தான்"என்றவாறு சிரித்தான் சேகர்.

பஸ்  ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சேகரும்,ரூபனும் அவர்களைக் கடந்து செல்லும் அந்த ஜீன்ஸ்,டீசேர்ட் காரியைப் பார்த்தார்கள்,

" பார்த்தியா மச்சான்,இந்த ஊரின் நிலவரத்தை எங்க ஊரில இருந்து வந்து இந்த வயசிலேயும் ஸ்டைலாக தலைமுடியையும் வெட்டி,ஜீன்ஸ்அணிந்து கொண்டு போற போக்கை கண்டியா ?"என்ற சேகரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் தலையாட்டிய ரூபன்.

" தமிழ்ப் பெண்கள் என்று சொல்ல முடியுமே? ஏதோ தாங்களும் வெள்ளையள் எண்டு நினைக்கினம் "என்றான்

"தம்பியவைக்கு எந்த ஊர்"என்ற குரல் பின்னாலிருந்து கேட்கவும் திடுக்கிட்டு இருவரும் திரும்பினார்கள். வழுக்கை விழுந்த கண்ணாடி அணிந்த மனிதர் அதே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

" நான் தாவடி,இவன் நல்லூர் "என்றான் சேகர் கொஞ்சம் பதைப்புடன்.

மீண்டும்அதே புன்சிரிப்புடன் "தம்பியவை உங்களுக்கு அக்கா,தங்கச்சிமார் இல்லையே ?"என்றார்.

அவரைக் கொஞ்சம் எரிச்சலுடன் பார்த்த இருவரையும் நோக்கிய அவர்,

"பின்னே என்ன சும்மா ரோட்டில நடக்கிற ஒரு பெண்ணைப் பார்த்து அதுவும் முன்ன,பின்ன தெரியாத பெண்ணைப் பற்றி இப்படியே காமெண்ட் அடிக்கிறது?"மீண்டும் அவர் முகத்தில் ஒரு புன்னகை இழையோடியது.

"ஏன் அது உங்கட சொந்தக்காரரே ?"கொஞ்சம்கேலியாக ரூபன் கேட்டான்.

" உங்களுக்கு பசிக்க இல்லையே வாங்க பக்கத்தில இருக்கிற தோசைக் கடைக்குப் போய்ச் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்"என்றவாறே நடக்கத் தொடங்கிய அம்மனிதரை ஏதோ மயக்கத்தில் பின் தொடர்பவர்களைப் போல சேகரும்,ரூபனும் பின் தொடர்ந்தார்கள்.

ஒரூ மூலையில் இருந்த வெறுமையான மேசையின் முன்னால் உள்ள கதிரையில் அமர்ந்த அம்மனிதர் உட்காருங்கள் என்னும் பாணியில் தனக்கு முன்னால் உள்ள கதிரைகளை நோக்கிக் கையைக் காட்டினார்.ஆசிரியரின் மூன்னே அமரும் மாணவர்களைப் போல சேகரும்,ரூபனும் அமர்ந்தார்கள்.

" என்ன தம்பிமார் மசாலா தோசை ஆர்டர் பண்ணிடலாமா "என்றவரைக் கொஞ்சம் அதிசயமாகப்  பார்த்தார்கள் இருவரும்.

" வெயிட்டர்" என்று கையை அசைத்தவரை நோக்கி ஒரு மெல்லிய உருவமுடைய பையன் வந்தான்.

" மூணுமசாலா தோசை கொண்டு வாப்பா "என்றார் அந்த வயதான மனிதர்.

"என்ன சார்,சும்மா நின்ற எங்களைக் கூட்டிக் கொண்டு வந்து சாப்பாடு வாங்கித்தாறீங்க உங்கட பேர் என்ன ?"கொஞ்சம் அவசரமாகக் கேட்டான் சேகர்

சிரித்தார் அந்த வயதான மனிதர்.

" என்னோட பேர் கிடக்கட்டும் ,சும்மா பிரண்ட் என்றே கூப்பிடுங்கோ, நானும் உங்களைப் போலத்தான் எண்ட இருபதுகளில படிக்கவெண்டு இங்க வந்தனன். பிறகென்ன வாழ்க்கை இங்கேயே செட்டிலாகிடுச்சு"என்றார்.

" உங்கடகுடும்பம் .. . . " இழுத்தான் ரூபன்.

" தம்பி,நான் ஒரு தனி மனுசன்.என்னோட அப்பா,அம்மா எல்லாம் மேல போய் கனவருஷமாகுது."

அப்போதுவெயிட்டர் அவர்களுடைய தோசைகளைமேசையில் வைத்தான்.

" உம் சாப்பிடுங்கோ " என்றவாறு கண்ணசைத்தார் அவ் வயதான்மனிதர்.
மூவரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மெளனத்தைக் கலைத்தார் பெரியவர்.

" தம்பியவை, உங்களுக்கு கதை கேட்கப் பிடிக்குமே ?" என்றார் புன்னகைத்தவாறே.

தலையாட்டினார்கள் இருவரும்.

தொண்டையைக் கனைத்தவாறே தொடங்கினார் அம்மனிதர்,

தாய்,தந்தையர்க்கு ஒரே பையன் கிருபா. அவனுடைய அப்பா சதாசிவம் பாங்கில் மனேஜராக இருந்தார்.அம்மா தங்கம்மா பள்ளியில தமிழ் டீச்சராக வேலை பார்த்தாள்.

அவர்கள் வாழ்ந்தது ஈழத்தின் வட புலத்தில் உள்ள இணுவில் என்னும் ஊரில்.

அவர்களுடைய வீட்டிற்கு அருகாமையில் மற்றொரு குடும்பம் இருந்தது. கனகசபை,வள்ளியம்மை என்னும் அந்த தம்பதியருக்கு ஜந்து குழந்தைகள் மூத்தவள் விஜயா.அவள்,கிருபா படித்த அதே பள்ளியில் தான் அவனை விட ஒரு வகுப்புக் கீழாகப் படித்தாள். கிருபாவின் அம்மா தமிழ் கற்பித்த பள்ளியும் அதுதான்.

மதிய இடைவேளையின் போது அனைத்துச் சிறுவர் சிறுமியரும் ஒன்றாக அரசமரத்து நிழலில் அமர்ந்து தாம் கொண்டு வந்த உணவை உண்பார்கள். ஆனால் விஜயா மட்டும் எப்போதும் கொஞ்சம் ஒதுங்கியே உட்காருவாள்.

அவளை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டிருந்த கிருபாவின் கண்களில் ஒருநாள் வேறு சில சிறுவர்கள் அவளிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான்,தீடிரென விஜயா எழுந்து ஓடுவதைக் கண்டதும், கிருபாவும் தொடர்ந்தான்.குழாயடியில் போய் நின்ற விஜயா கண்ணீரைத் துடைப்பதைக் கண்டான்.

அப்போது விஜயா கூறியது இன்றுவரை கிருபாவின் மனதில் ஆழப் பதிந்திருந்தது.ஆமாம் விஜயாவின் தந்தைக்கு ஜந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்ததேயொழிய அவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்புணர்வு இருக்கவில்லை.

ஒரு பலசரக்குக் கடையில் சிற்றூழியராக வேலைபார்த்து வந்த அவர் கையில் கிடைக்கும் பணத்தை குடிபோதைக்கே செலவழித்து வந்தார்.

விஜயாவின் குடும்பம் அவள் அம்மா அக்கம் பக்கத்து வீடுகளில் செய்யும் எடுபிடி வேலைகளுக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் ஓடியது.

அப்படிப்பட்ட அவளுக்கு மதிய போசனத்துக்கு என்ன அறுசுவைப் பதார்த்தங்களாக கிடைக்கும்?பழஞ்சோற்றினுள் நீர்,அத்தோடு கொஞ்சம் ஊறுகாய் அதுதான் அவளது சாப்பாடு.

அதை அவள் கூறியதும் தான்,ஏன்அவள் ஏனையோருடன் உட்கார்ந்து உணவருந்துவதில்லை என்பது கிருபாவிற்குப் புரிந்தது.அன்று கூட அவளைச் சீண்டி அவளிடம் வம்பிழுத்தவர்களின் தொல்லை தாங்காமல் தான் அவள் ஓடியிருந்திருக்கிறாள் என்பதும் கிருபாவிற்குப் புரிந்தது.

அன்றிலிருந்து அவனுக்கு விஜயாவின் மீது ஒருபரிவு ஏற்பட்டது. வீட்டிலிருந்துஏதாவது விஷேட பதார்த்தங்கள் கொண்டு வந்தால் அதை விஜயாவுடன் :பகிர்ந்து கொள்ளத் தவற மாட்டான்.

முதலில் அவற்றை ஏற்றுக் கொள்ள விஜயா மறுத்தாள்.தன்மீது மற்றையோர் பரிதாபம் காட்டுவதை அவள் விரும்பவில்லை. ஆனால் தன்னை ஏன் அவள் ஓர் உற்ற நண்பனாகக் கொள்ள முடியாது என்ற கிருபாவின் கேள்வியில் இருந்த நியாயத்தை அவள் புரிந்து கொண்டதால் அவனுடைய நெருங்கிய தோழியானாள்.

பாங்கில் மனேஜராக இருந்த கிருபாவின் அப்பாவிற்கு குடிகார கனகசபையின் மகள் விஜாயாவுடன் கிருபா நட்புப் பாராட்டுவது பிடிக்கவில்லை. உனக்கு வேறு யாராவது ஒழுங்கான நண்பர்கள் கிடைக்கவில்லையா? என்றுதிட்டுவார். ஆனால் அம்மா தங்கம்மாவிற்கு கிருபாவின்உண்மையான உள்ளமும்,விஜயாவின் குடும்ப நிலைமையும் நன்றாகப் புரிந்தது,அதனால் கிருபாவிற்கு அவளுடைய ஆதரவு இருந்தது.

க..பொ.த சாதாரண தர வகுப்பு ( 10 வது வகுப்பு )  வரை இருவரும் ஒன்றாகப் படித்தார்கள்.ஆனால் கிருபாவிற்கு படிப்பதற்கு இருந்த வசதி விஜயாவிற்கு இருக்கவில்லை.அவள் தன் தாயுடன் ஒத்தாசையாக வேலைக்கு சாயந்தரங்களில் செல்ல வேண்டியிருந்தது.

ஆனாலும் கிருபா தன்னால் செய்யக்கூடிய வகையில் அவளது கல்விக்கு உதவினான்.இருவரும் பரீட்சையில் சித்தி எய்தினார்கள்.அவர்களுடைய பள்ளியில் அதற்கு மேல் படிக்க முடியாது.கிருபாவை விடத் திறமையாகச் சித்தியெய்திய விஜயாவிற்கு ஒரு முன்னனிக் கல்லூரியில் ஸ்கொலர்ஷிப் கிடைத்தது.

இருவரும் வேறு,வேறு பாடசாலைகளில் பயில வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் வாரத்திற்கு ஒருமுறை கடிதத் தொடர்பு இருந்து வந்தது.

உயர்தரப் பரீட்சையில் தேறாத கிருபாவை அப்பா லண்டனுக்கு அனுப்ப முடிவெடுத்தார்.அவனுக்கோ அதில் எள்ளளவும் இஷ்டமில்லை.ஆனால்அப்பா விடுவதாகவில்லை.

அப்போதுதான் ஒரு நாள் அவனுக்கு விஜயாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது அவனைச் சந்திக்க விரும்புவதாக எழுதியிருந்தாள்.

அவளைச் சந்தித்தபோது அவனுக்கு ஒரு சந்தோஷம் காத்திருந்தது. ஆமாம் கல்லூரியில் விஜயாவின் விரிவுரையாளர் ஒருவர் அவளது திறமையைக் கண்டு அவளது வறுமையால் அவளின் எதிர்காலம் பாழ்படக்கூடாது என்று அவளை தன்னுடைய செலவில் லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகவும், லண்டனில் படித்து முடித்து விட்ட அவனது பையனையே அவளுக்குத் திருமணம் பண்ணி வைக்கப்போவதாகவும் சொல்லியிருப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அவள்சொன்னாள்.

விஜயா லண்டனுக்குப் போகிறாள் என்னும் வார்த்தை அவனின் காதுகளில் சங்கீதமாக ஒலித்தாலும், அவள் கூறிய திருமண விடயம் ஏனோ அவனை நெருடியது.

அன்றிரவு தூக்கம் வராமல் புரண்ட போது தான் விஜயாவின் மீது தான் கொண்டிருப்பது நட்பல்ல அதனையும் தாண்டிக் காதல் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

அவன்கண்களிலில் இருந்து கண்ணீர்த்ஜ் துளித்துளியாய் துளிர்த்தது கன்னங்களின் வழி உருண்டோடியது. அவளுக்கு கிடைத்திருப்பதோ யோகம் அந்த யோகத்தைத் தன் காதல் என்னும் சுயநலத்தினால் தடைசெய்வதா?இல்லை என்று முடிவெடுத்தான்.

கண்களைத்துடைத்துக் கொண்டான்.

லண்டனுக்கு போகவே மாட்டேன் என்று அடம் பிடித்த தன் மகன் கிருபா துரிதமாக லண்டன் பயண அலுவல்களில் ஈடுபட்டது அவனது தந்தை சதாசிவத்தை ஆச்சரியத்தினுள் ஆழ்த்தியது.

கிருபா லண்டன் வந்து இரு வாரங்களுக்குள் விஜயாவும் லண்டன் வந்துவிட்டாள்.அவளது ஸ்பன்சர் நித்தி அவளுடைய விரிவுரையாளரின் மகன்,அவளுக்கு அவளது காலேஜுக்கு அருகாமையில் ஒரு ரூம் வாடகைக்கு ஏற்பாடு செய்திருந்தான். கிருபாவும்,விஜயாவின் இருப்பிடத்திற்கு அருகாமையில் ஒரு தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

லண்டன் மாணவ வாழ்க்கையின் சுழலுக்குள் அகப்பட்டு இருவரும் திக்குமுக்காடினார்கள்.விஜயாவோ படிப்பு மட்டுமின்றி கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் பகுதிநேர வேலை செய்து தனது தம்பி,தங்கையரின் வாழ்வைச் சீராக்கினாள்.

ஆனால் வாரம் தவறாது இருவரும் வெள்ளி தோறும் வெகு தொலைவில் இருந்த தோசைக்கடைக்குச் சென்று தோசை சாப்பிடுவது வழக்கம்.

அப்போதுதான் ஒருநாள்  விஜயா தான் இனிமேல் அவனை வாராவாரம் சந்திப்பதை நிறுத்திக் கொள்ளப்போவதாகச் சொன்னாள்.அவளைத் திருமணம் செய்ய இருக்கும் நித்திக்கு அவள் கிருபாவைச் சந்திப்பது பிடிக்கவில்லை என்று கூறினாள்.

உலகமேஇருண்டது போலிருந்தது கிருபாவிற்கு,இருப்பினும் அவள் நல்வாழ்வைக் கருத்திற் கொண்டு அதை ஏற்றுக் கொண்டான்.

ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸிற்காகக் கிருபா காத்துக் கொண்டிருக்கும் போது நித்தி காரில் செல்வதைக் கண்டான்,அவனுக்கு அருகில் காரில் ஒரு இளம் வெள்ளைக்கார யுவதி அமர்ந்திருந்தாள்.கார் மெதுவாக ஓரமாக நின்றது.கிருபாப ஸ் ஸ்டாண்டில் ஒதுக்குப்புறமாக மறைந்து கொண்டான்.

அந்தப் பெண் காரிலிருந்து இறங்கும்போது நித்தி அவளது உதட்டில் முத்தமிட்டான்.அவள் கையை அசைத்தவாறே பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றாள்.அவளை நெருங்கிய கிருபா ,உன் கணவனுக்கு உன் மீது ரொம்பஅன்பு போலிருக்கிறது என்று நகைச்சுவையாகச் சொல்லவும், இல்லை அவன் எனது பாய்பிரண்ட் ஆனால் விரைவில் கணவனாகி விடுவான் என்றாள் மகிழ்ச்சியுடன் சிரித்தவாறே.

கிருபாவின் தலையில் இடி விழுந்தது போலிருந்தது.அவசரம்,அவசரமாக அடுத்த நாள் விஜயாவைச் சந்தித்துதான் கண்டவற்றை அப்படியே சொன்னான்.அப்போதுதான் தன்னையுமறியாமல் தான் அவளைக் காதலிப்பதையும் அவிழ்த்துவிட்டு விட்டான்.

கண்களில் கண்ணீர் வழிய எதுவுமே பேசாது விரைந்து விட்டாள் விஜயா. ஆனால் அவனை மறுநாள் சந்தித்தவள் தான் நேரிடையாக நித்தியிடம் இதைக் கேட்டதாகவும்,தன்மேல் உள்ள காதலினால் கிருபா வேணுமென்றே நித்தியின் மீது பழி சுமத்துவதாக நித்தி கூறியதாகச் சொன்ன விஜயா,தான் நித்தியை நம்புவதாகவும் அடுத்த மாதமே ரீஜிஸ்டர் ஆபிஸில் தங்களுக்குத் திருமணம் என்றும் மற்றோர் இடியைத் தூக்கிப் போட்டாள்.

அதுமட்டுமின்றி தன்னுடைய திருமணம் முடியும்வரை தன்னுடைய கண்களில் கிருபா தட்டுப்படக்கூடாது என்றும் விதியொன்றைப் போட்டுவிட்டாள்.

ஒரேயடியாகத் தனக்குள்ளே தன்னை முடக்கிக் கொண்டான் கிருபா. அவர்களின் திருமணமும் முடிந்தது.அதன்பின்பு சில தடவைகள் கோவிலில் விஜயாவை சந்தித்திருக்கிறான்.பல இடங்களில் நித்தியையும் அந்த வெள்ளைக்காரப் பெண்ணையும் சந்தித்திருக்கிறான்.

வருடங்கள்இரண்டு ஓடியது.ஒருநாள் கிருபா வீட்டு அழைப்பு மணி அடித்தது .கதவைத் திறந்தான்,அங்கே
கண்ணீருடன் விஜயா.

நித்திக்கும்,அந்த வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் இருந்த தொடர்பை அறிந்த விஜயா அந்தப் பெண்ணைச் சந்தித்திருக்கிறாள்.அப்போதுதான் அறிந்து கொண்டாள் நித்தி மூலமாக அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை உண்டு என்று.தான் யாரென்று சொல்லாமலே வீடு திரும்பிய விஜயா,நித்திக்கு விவாகரத்திற்கான கையொப்பத்தை போட்டுக் கொடுத்து அந்தப் பெண்ணையும்,குழந்தையையும் வாழ வைக்கும் படி வேண்டிக் கொண்டாள்.

தனக்குக் கிடைத்தது போல் ஒரு பொறுப்பற்ற தந்தை அந்தக் குழந்தைக்குக் கிடைக்கக் கூடாது என்பதில்அவள் மிகவும் தீர்மானமாக இருந்தாள்.

தான் இனிமேல் தனிமையில் வாழப்போவதாகச் சொன்ன விஜயா கிருபாவிடம் கேட்ட ஒரேயொரு கேள்வி,என்மீது உனக்கிருந்த காதலை நீ அப்போதே சொல்லியிருக்கக்கூடாதா ? என்பதுதான்.

அப்புறம் என்ன தன்னுடைய குடும்பத்துக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த விஜயா தன்னுடைய தம்பி,தங்கை அனைவரையும் லண்டனுக்கு அழைத்துச் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டாள்.

கிருபாவை நண்பனின்றி வேறு எந்த நிலைக்கும் கொண்டு செல்வதற்கு தான் தகுதியானவள் அல்ல என்பதில் விஜயா பிடிவாதமாக இருந்ததால், கிருபாவின் வேண்டுதலை ஏற்று அவனை மறுமணம் செய்து கொள்ள அவள் மறுத்துவிட்டாள்.

அவளை நிழல் போல் தொடர்ந்து காலம் என்னும் வெயிலின் கொதிப்பிலிருந்து பாதுகாக்கும் நிழல் மரமாக கிருபாவும் வாழ்ந்து.கொண்டிருக்கிறான்.

பெரியவர் கதையைக் கூறி முடித்ததும் அவரை அதிசயமாக பார்த்த சேகரும்,ரூபனும்

"சார் இப்போது நீங்கள் இந்தக் கதையைச் சொல்ல வேண்டிய காரணம்?"

" தம்பியவை நீங்க முன்ன கண்டிராத ஒரு பெண்ணைப் பார்த்து சொன்ன காமெண்டுக்காகத்தான் .. . ." என்றார்மீண்டும் புன்னகையுடன்.

மீண்டும்புரியாமல் விழித்த இருவரும்,

" அதுக்கும்,இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் சார்? குழப்புறீங்களே!"

மீண்டும்பலமாகச் சிரித்தார் அம்மனிதர்,

" அந்தப்பெண்தான் விஜயா .. . ."

சேகர்,ரூபன் இருவரது கண்களும் அகல விரிந்தன,

"அப்போநீங்க.. . ."

" நான்தான் .. . .அந்தக் கிருபா" மீண்டுமொருபுன்னகை

"ஒன்றாக எழுந்து கொண்ட சேகர்,ரூபன் இருவரும் அவரது கைகளைப் பற்றிக் கொண்டே,

"எங்களை மன்னிச்சிடுங்க சார் " என்றார்கள் தளுதளுத்த குரலில்.

" சே! இதெல்லாம் என்ன வாங்க பேசிக் கொண்டே போகலாம் " என்றவாறு பில்லுக்குரிய பணத்தை தட்டில் வைத்தவாறே செல்லும் அந்த வயதான வழுக்கைத் தலை மனிதரைத் தொடர்ந்தார்கள் சேகரும் ,ரூபனும்.


(யாவும்கற்பனையே)

ஆக்கம் : சக்தி சக்திதாசன்

Tuesday, August 08, 2023

புன்னகை மறந்த பூங்கொடி

புன்னகை மறந்த பூங்கொடி
-------------------------------------------------

கையிலிருந்த காப்பியை பருகியவாறே அடுத்த மூலையிலிருந்து அவசரமாக    கம்பியூட்டரைத் தட்டிக் கொண்டிருக்கும் ரேவதியைப் பார்த்தான் முரளி. இந்த   ஆபிசில் அவன் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றது. ஏதோ புரியாத காரணம் அவனுக்கு ரேவதியின் மீது ஒரு தனி அக்கறை. அது அவளும்  சக ஆசியப் பெண் என்பதினாலா?, அல்லது தனது தாய்மொழியான தமிழ் தான் அவளுக்கும் தாய்மொழி என்பதினாலா? என்று அவனுக்குப் புரியவில்லை.

இதைப்பற்றி போன வாரம் அவனது உற்ற நண்பன் டேவிட் இடம் கூறியபோது " டேய் , நீயும் மத்தவங்களைப் போல காலாகாலத்தில ஒரு கல்யாணத்தைப் பண்ணியிருந்தீன்னா இப்பிடியெல்லாம்  பரிதாப உணர்ச்சிகள் அறியாத     பொம்பிளங்க கிட்ட ஏற்படுமா? " என்று அந்தச் சந்தர்ப்பத்தை அவனது        திருமணம் செய்யாத தன்மையைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்திக் கொண்டான்.

டேவிட் பாவம், முரளி மீது உள்ள அதீத பாசம், பின் என்ன தாய்நாட்டில் ஜந்து வயதில் இருந்து ஒன்றாகப் படித்துப் பின் ஒன்றாகப் புலம்பெயர்ந்து லண்டன் வந்து இன்று வரை உற்ற நண்பனாக இருக்கும் அவனுக்கு அக்கறை இருப்பதில் என்ன ஆச்சரியம்.
தாய்நாட்டிலிருக்கும் போது டேவிட் சரளாவையும், முரளி, மல்லிகாவையும்   காதலித்தது ஒரு பொது ரகசியம். உற்ற தோழிகளான சரளாவுக்கும்,         மல்லிகாவுக்கும் ஒரேயொரு வித்தியாசம், காதலுக்காக எதையும் துறக்கத் தயாராக சரளாவும், தனது வசதிகள் தொடர்ந்தும் அதேயளவு இருக்கும் என்பது உறுதியானால் மட்டுமே, காதல் திருமணத்தில் முடியும் என்ற மனப்பான்மையில் மல்லிகாவும் இருந்தமையே.

முடிவு டேவிட்டின் காதல் வெற்றியடைந்து கல்யாணத்தில் முடிய, முரளியின் காதல் கனவாகி செல்வம் என்னும் காற்றில் கரைந்து போனது.

அதன் பின்பு இருபது வருடங்கள் ஓடி வாழ்க்கையின் மத்திய பகுதிக்கு வந்து வசதிகளின் வளைவுக்குள் நுழைந்து விட்டும் கூட அவனது காதல் கொடுத்த கசப்பான உணர்வினால் திருமணம் என்பது ஒரு பொய்யான சடங்கு என்று அதைத் தவிர்த்தே வந்தான் முரளி. பெண்களின் மீது நம்பிக்கை கொள்ள முடியாதவாறு மல்லிகா அவனது மனதை பாதித்து விட்டிருந்தாள்.

மனம் கடந்தகாலச் சுழலில் கொஞ்ச நேரம் சுழன்றாடி விட்டு மீண்டும் அந்த   ஆபிஸ¤க்குள் வந்தது. மறுபடி முரளியின் பார்வை ரேவதியின் மீது விழுந்தது. 

பார்வைக்கு சுமார் நாற்பது வயது மதிக்கத் தக்க பெண். முகத்தில் சாந்தத்தோடு கூடிய பாந்தமான அழகு, தலைமுடி ஓரங்களில் வெள்ளிக் கீற்றுக்களென ஓரிரு நரைமுடிகளைக் கொண்டிருந்தது.ஆபிஸ் நேரம் தவிர்த்து மாலைநேரங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து வெளியே போவார்கள் என்றும் அறிந்திருந்தான்.

அப்போது லண்டனில் மிகவும் பிரபலமான ஒரு மியூசிக்கல் ஷோ நடந்து கொண்டிருந்தது. அது ஒரு இந்திய கலாச்சார ஷோ, வெள்ளையர்கள் மத்தியில் கூட மிகவும் பிரபலமடைந்திருந்தது. அப்போது ஒருநாள் அனுஷா, முரளியிடம்    " எனது கணவரும், பிள்ளைகளும் இரண்டுவாரம் இந்தியா போயிருக்கிறார்கள், எனக்கு மிகவும் போரிங் ஆக இருக்கின்றது ரேவதியும் வருவதாக               கூறியிருக்கின்றாள், வருகிறாயா நாம் அந்த இண்டியன் ஷோ போய்ப் பார்க்கலாம்" என்று அழைத்தாள்.

சிறிது தயங்கிய முரளியின் மனதில் அவனது நண்பன் டேவிட் கூறும் வார்த்தைகள் பட்டுத் தெறித்தன " டேய் ஒருமுறை நெருப்பில் கை வைத்து     விட்டாய், அதற்காக குளிர் காய்வதற்காகக் கூட நெருப்பின் பக்கம்   நிற்க மாட்டேன் என்றா அடம் பிடிப்பது, கொஞ்சம் உனது கொள்கையை மாற்றிக் கொள்ளக் கூடாதா ? " . அது மட்டுமல்ல அவனது மனதில் ஏதோ ஆவல்,   ரேவதியைப் பற்றி அறிய வேண்டும் என்றும் தூண்டியது.  " ஓகே, வருகிறேன்" கொஞ்சம் துள்ளலுடன் ஒலித்தது அவன் குரல்.

அந்தத் தியேட்டரைச் சென்றடைந்து    வாயிலை நெருங்கி அனுஷா சந்திக்கச் சொன்ன இடத்திற்கு சென்றான். அங்கே ரேவதி நின்று கொண்டிருந்தாள்.   அழகிய கருநீல நிறம் கலந்த சுடிதாரின் அழகை அவள் அணிந்திருந்த கறுப்புக் கோட் மறைத்தது.

அவனைக் கண்டதும் ஒரு நாணம் மருவிய புன்னகை அந்த பூங்கொடியின் முகத்தில்    மலர்ந்தது. கழுத்தை மறைத்திருந்த கோட்டின் வழியாக தாலி தெரிகின்றதா என்று அவனது கண்கள் துருவின. ஹ¥ம் அவன் கண்களில் எதுவுமே   தட்டுப்படவில்லை. தாலி கழுத்தில் இல்லை என்பதை மட்டுமே வைத்து எப்படி அவள் திருமணமாகாதவள் என்று சொல்ல முடியும்? இன்றைய பெண்கள் அதுவும் லண்டனில்.....ஒருவேளை கிறீஸ்துவப் பெண்மணியாக இருந்து தாலி அணியாதவளாக இருந்து விட்டால்... அவனது மனம் பல  கேள்விகளைத் தொடுத்தது. சே! என்ன இது ஒரு இளைஞனைப் போல இது என்ன... பைத்தியக்காரனாகி          விட்டேனே .. சுதாகரிக்கும் போது,
" வாட், பேசவே மாட்டெங்கிறீங்க " .....குரல் ஒலித்ததும் திரும்பவும் அவளைப் பார்த்தான். சிலை பேசுமா? ஓ பேசி   விட்டதே ...
" ஓ சாரி, நான் அனுஷாவைக் காணல்லையேன்னு பாத்தேன் "    மழுப்பினான்.
" ஜ ஆம் சாரி, அனுஷா போன்   பண்ணினாள் அவளோட மாமியாருக்கு உடம்புக்கு ஆகலியாம்,   வரமுடியலேன்னுட்டு ..." தயக்கத்தோடு அவனைப் பார்த்தாள்.
" அப்போ சால் வீ கோ ஹோம் ? " கேட்டான் முரளி ஏமாற்றத்துடன்
" வை, ஏன் இந்த ஜேர்னியை வேஸ்ட் பண்ணனும், இவ் யூ டோண்ட் மைண்ட், நாம பாக்கலாம் " எதிர்பார்ப்புக்களோடு ரேவதி
" ஜ டோண் மைண்ட் " உற்சாகமாக முரளி.

அந்த மாலை இவ்வளவு இனிமையாக  இருக்கும் என்று இருவருமே          எதிர்பார்க்கவில்லை. மாறி, மாறி ஒவ்வொருவரும் மற்றவரைச் சிரிப்பூட்டும் வகையில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஷோ முடிந்து வீடு திரும்பும் போது,
" நான் வேணுமென்னா உங்க கூட உங்க ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா? " அக்கறையுடன் முரளி கேட்டான்.
என்ன மிஸ்டர் முரளி இவ்வளவு நாளும் நீங்களா என் கூட துணையா வந்தீங்க ? " சிரித்தவாறே கேட்டாள் ரேவதி.

இப்ப உத்தரவு கொடுத்தீங்கன்னா வாழ்க்கை பூராவும் துணையா வரேனே .. என்று சொல்ல முரளியின் மனம் துடித்தாலும், சிரித்து மழுப்பி விட்டான்.

"எனி வே, இந்த ஈவினிங் ரொம்ப இண்ட்ரஸ்டிங் ஆக இருந்துது, வீ வில் மீட் அகெய்ன்" என்று விடைபெற்றாள் ரேவதி.

எத்தனையோ கேள்விகள் தொண்டவரை வந்து சிக்குப்பட்டு  விட்டன. முரளிக்கு இருந்தாலும் ஏனோ அவன் மனம் குதூகலத்தால் துள்ளியது. அன்று இரவு நாண்கு விழிகளும், இரண்டு நெஞ்சங்களும் உறக்கம் வராமல் உழன்று கொண்டிருந்தன.

அடுத்தநாள் காலை ஆபிஸ் லிப்டில்   சந்தித்த அனுஷா நேற்று ஈவினிங் இரண்டு பேரும் நன்றாக என்ஜோய் பண்ணினீங்க போலிருக்கு என்று சொன்னபோது, ரேவதி அதைப்பற்றி ஏற்கனவே அவளுக்கு சொல்லிவிட்டாள் என்று முரளி       புரிந்து கொண்டான்.அன்றிலிருந்து டீ பிரேக், லஞ்ச் பிரேக் மூவரும் சேர்ந்தே கண்டீனில் வலம் வந்தார்கள். ரேவதியும், முரளியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் போல ஒரே சிரிப்புடன் சேர்ந்த சம்பாஷணையில்  லயித்தார்கள்.

டேவிட் கூட " டேய், முரளி என்னடா ரேவதியைக் காதலிக்கிறாயா? ஆளே மாறிப்போய் விட்டாயே..." என்று   ஆச்சரியப்பட்டு விட்டான்.

காதலா ? எனக்கா ? அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரேவதியைக் காணும் போதும், பேசும் போதும் மனதுக்குள் உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுப்பது உண்மைதான், ஆனால் அது ஏனோ காமம் கலந்த உணர்ச்சியாக அவனுக்குத் தென்படவில்லை. ஒரு உற்ற நண்பனுடன் மனம் திறந்து மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஒரு உணர்வுடன் தான் பழகுவது போலத்      தெரிந்தது.

ஒருவேளை, ரேவதி இதைக் காதல் என்று தவறாக எண்ணி விடுவாளோ ? .. அவன் மனம் அங்கலாய்த்தது.

அன்று ரேவதியைச் சந்திக்கும்போது, " ரேவதி நியூஇயருக்கு என்ன       புரோகிராம்? " என்று கேட்டான்
" என்ன நியூஇயர் இட் இஸ்        ஏப்பிரல் ..." கொஞ்சம் திகைப்புடன் கேட்டாள் ரேவதி.
" யேஸ், ஏப்பிரல் 5ம் திகதி இன்று, வருகின்ற 14ம் திகதி தமிழ் நியூஇயர் மறந்தே விட்டாயா? என்று கேட்ட  முரளியை விசித்திரமாகப் பார்த்தாள் ரேவதி. ஓ, நீயும் கூட இந்த கலாச்சாரக் கும்பலுடன் சேர்ந்தவனா" கொஞ்சம் ஏளனத்துடன் கேட்டவள்
அவசரமாக " நான் கொஞ்சம் வெளியே போகணும் " என்று சொல்லி விட்டு    கிளம்பி விட்டாள்.

ஒன்றும் புரியாதவனாக கொஞ்சம் திகைத்த முரளி, தான் என்ன அப்படித் தப்பாகக் கேட்டு விட்டேன் என்று புரியாமல் குழம்பினான்.

அடுத்து வந்த சில நாட்கள் ரேவதி அவனுடன் கொஞ்சம் ஒதுங்கியே பழகினாள். அது ஏனென்று புரியாமல்  தவித்த முரளி அனுஷாவிடம் தனது குழப்பத்தைப்  பகிர்ந்து கொண்டான். அப்போது அனுஷா,

" முரளி ரேவதியைப் பற்றி உனக்குத் தெரியாத விஷயத்தை அவள் அனுமதி இல்லாமலே உனக்குச் சொல்லப்   போகின்றேன். பாவம் ரேவதி சிங்கப்பூரில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவள். பெற்றோருக்கு ஒரே மகளான அவளை ஆசையாக வளர்த்து ஒரு பணக்கார  மாப்பிள்ளைக்கு மனைவியாக்கினார்கள்.  தமிழ்க் கலாச்சாரங்களில் ஊறிப்போயிருந்த ரேவதியும், கணவனுடன்  மிகவும் அன்பாக இருந்தாள். அவர்களுக்கு ஒரு மகன். மகனுக்கு ஆறு வயதாயிருக்கும்போது,  சிங்கப்பூரில் ஏற்கனவே பழக்கமாயிருந்த ஒரு டான்ச் டீச்சருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த அவளது கணவன், ஒரு தீபாவளி தினத்தன்று அவளையும், மகனையும் விட்டுப் பிரிந்து போய் விட்டான். அதன் பின்பு மகனே கதியென்றிருந்த அவள் தனது வாழ்க்கை முழுவதையும் தனது மகன்  கோபிக்கே அர்ப்பணித்தாள்.

கோபியும் வளர்ந்து பெரியவனானதும், தனது தந்தையைப் பற்றிக் கேட்கத் தொடங்கினான். மிகவும் கலாச்சார பக்தி கொண்ட ரேவதியும் தனது மகனுக்குத் தந்தையின் முழு விபரங்களையும் கூறி, அவனைச்     சந்திப்பதற்காக அவனை  சிங்கப்பூர் அனுப்பி வைத்தாள். அன்று ஒரு தமிழ்ப்புத்தாண்டு தினம். அன்றுதான் அவனது மகன் லண்டன் திரும்பி வருவதாக இருந்தது. அவன் வரவில்லை, புத்தாண்டு அன்று அவளுக்கு ஒரு புதிய செய்தி கிடைத்தது, அவளது மகன் கோபி அப்பாவுடன் தான் இனி வாழ்ப்போகின்றேன் என்று அனுப்பிய செய்தி."

"பதினாறு வருடங்களாய்க் கண்ணின் மணி போலக் காத்த மகன், பதினாறு நாட்களில் பாசத்தை மறந்ததும், அனைத்தையும் துறந்து விட்டாள் ரேவதி. ஆனாலும் பைத்தியமாக மாறாமல் மன உறுதியுடன் இன்றும் வாழ்ந்து      வருகின்றாள். இப்போ கலாச்சாரம் என்பதுவே அவளுக்குக் கசக்கின்ற         விஷயமாகி விட்டது."

"முரளி, அவள் கொஞ்சம் செண்டிமெண்ட் ஆக இருந்தால் கொஞ்சம் பொறுத்துப் போ. உனது நட்பினால் தான் அவளின் முகத்தில் மீண்டும் மலர்ச்சியைக்   காண்கின்றேன். " என்று அனுஷா முடிக்கவும், முரளியின் நெஞ்சம் கனத்து, கண்களில் லேசாகக் கண்ணீர் பனித்தது.

அன்று ஏப்பிரல் 14ம் நாள், கையில் ஒரு பொட்டலத்துடன் ரேவதி வீட்டுக் கதவைத் தட்டினான் முரளி. கதவு      திறந்தது, கண்களில் சோகத்துடன்  காட்சியானது அந்தப் பூங்கொடி."உள்ளே வரலாமா?" தயங்கினான் முரளி.
" வாங்க " என்றவாறு உள்ளே சென்றாள் ரேவதி.

உள்ளே சென்றவன், ரேவதியின் கைகளில் அந்தப் பொட்டலத்தைத் திணித்தான். அவளை கம்பீரத்துடன் பார்த்துக் கொண்டே,

" ரேவதி, உங்கள் வாழ்க்கையின் சோகத்தை நானறிவேன் உண்மை அன்பு உங்கள் இதயத்தைப் புண்ணாக்கியதை நானறிவேன். நான்கூட ஒருவகையில் உண்மை அன்பினால் பாதிக்கப்பட்டவன் தான். நீங்க உங்களுக்கு சோகத்தைக் கொடுத்ததினால் புதுவருடத்தையே எதிர்க்கிறீங்க. ஆனா இந்தப் புதுவருடம் உங்களுக்கு ஒரு புதுச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறது..." அவன்    முடிக்கவில்லை
"என்ன சொல்றீங்க முரளி..." தயக்கமும், ஆவலும் நிறைந்த கேள்வி

" இந்தப் புதுவருஷத்துல, தமிழர் திருநாளில், உங்க கையில ஒரு பொட்டலத்தைக் கொடுத்திருக்கேன். இது நாம ரெண்டு பேரும் சேர்றதுக்கு அச்சாரம், கணவன் மனைவியா அல்ல, நண்பர்களாக. ஆமாம் ஒரு ஆணும் பெண்னும் ஜோடி சேர்வது இல்லற வாழ்க்கைக்காக மட்டுமா? இல்லையே நல்ல நண்பர்களாகக் கூட இருக்கலாமே. உண்மை அன்பை விலையாகக் கொடுத்து எமது இதயங்கள் புண்ணாச்சு. அதுக்குக் காரணமானவங்களும் தமிழங்க தானே.. அவங்களுக்கு புதுவருஷம் இருந்தா ஏன் நமக்கு இருக்ககூடாது? போங்க நான் சொன்னதை ஏத்துக்கிட்டீங்கன்னா  நான் கொடுத்த பொட்டலத்துல இருக்கிற பூவைத்  தலையில வச்சுட்டு வாங்க,

நண்பர்களாக சேர்ந்து இந்தத் தமிழர் திருநாளில கோயிலுக்கு போயிட்டு வருவோம், இல்லேன்னா அந்தப்பூவைக் கசக்கிப் போட்டுடுங்க நான்        போயிடுறேன் " ஆக்ரோஷமாக முடித்தான் முரளி.

கையிலிருந்த பொட்டலத்தை உற்றுப்பார்த்தவளின் மற்றக் கை பொட்டலத்தை நோக்கிப் போனது, கசக்கப்போகின்றதோ என்று பார்த்த  முரளியின் கண்களில் பொட்டலத்தை    பிரிக்கும் காட்சி மகிழ்வூட்டியது.

ஜந்து நிமிடங்களின் பின்னர், அவனுக்கே பிடித்த அந்தக் கருநீல    நிறச்சேலையணிந்து வெளியே வந்த ரேவதியின் தலையில் அந்த மல்லிகை மலர்கள் சிரித்தன.

அவனை நோக்கி நீட்டிய அவளது கரங்களைப் பற்றியபடி வெளியே வந்தான் முரளி, அந்தப் பூங்கொடியின் வதனத்தில் மறந்து போன புன்னகை மீண்டும் மலர்ந்தது.

                           ------------------------

(யாவும் கற்பனையே)
ஆக்கம் - சக்தி சக்திதாசன்